Sunday, October 12, 2014

பகுத்தறிவுப் பாவலன் 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பாது காப்புக்காகவும் தமிழர்களாகிய நாம் நமது பங்களிப்பைத் தரவேண்டும் என்று நண்பர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர் கேட்டார், ‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்து... என்றெல்லாம் கூறி உலகின் மூத்த மொழி தமிழ் என்கிறோம்... தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று கொண்டாடி மகிழ்கிறோம். பிறகும் ஏன் தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றியும் பாது காப்பைப் பற்றியும் இன்றைக்கும் பேசிக் கொண் டிருக்கிறோம். அதற்கு என்ன தேவை இப்போது இருக்கிறது?’ என்று.
அவருடைய இந்தக் கேள்வி நமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. காரணம், தமிழர்கள் பலர் இப்படித்தான் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார் கள். அந்த அளவுக்கு தமிழர்கள் மாற்றப்பட்டிருக் கிறார்கள்; மழுங்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மொழி எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு நம் மொழிக்கும் இனத்துக்கும் எதிரிகளும் பெருகி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லை. அது குறித்து அவர்களுக்கு அக்கறையும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்ப்பணி ஆற்றுவோரிடம் கேள்வி கேட்பதற்கோ, ஏகடியம் பேசுவதற்கோ முதல ஆளாக வந்து நிற்பார்கள். 
மொழிப் பாதுகாப்பின் தேவையை மொழியின் அருமை பெருமைகளைத் தெரிந்தவர்கள் நன்கே உணர்ந்திருக் கிறார்கள். தமிழ் மொழியைத் தமிழினப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்க தமிழ் அறிஞர்களும், தமிழகத் தலைவர்களும் எந்த அளவுக்குப் போராடியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் பலர் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், புதிய தலைமுறைக்கு அத்தகையச் செய்திகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை மொழி - இன உணர்வாளர்களுக்கு இருக்கிறது. தேசியக் கவிஞர் என்று பாரதியாரைத் தெரிந்த அளவுக்கு, தமிழிலக்கிய வரலாற்றின்  இனமானப் பாவலர், பாவேந்தர் என்று பகுத்தறிவாளர்களால் போற்றப்படும்  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. நிச்சயம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதி விழாவைத் தவறாமல் நடத்தி வரும் தமிழமைப்புகள் பல, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழா எடுக்கத் தயங்குவதுண்டு. காரணம், அவர் திராவிடத்தைக் தூக்கிப் பிடித்தார் என்பதுதான். ஆனால், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக, பாட்டாளி மக்களுக்காக, ஏழை எளியோருக்காக, பெண்ணினத்திற்காகப் பாடிய தனிப் பெருங்கவிஞராகத் திகழ்ந்தவர், அவர்.  கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தம் எழுத்துகளை ஆயுதமாக்கி, கவிதைகளைக் கன்னித் தமிழ் காக்கும் படைகளாக்கி, கூர் தீட்டிய ஈட்டிமுனைச் சிந்தனைகளைக் கொண்டு தமிழ்ப் பகைவர்களை எதிர்த்துப் போரிட்ட தமிழினத்தின் தன்மானப் போராளியாகத் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
என்று தமிழருக்கு உணர்ச்சியையும் எழுச்சியை யும் ஊட்டியவர்.
இன்று ஆயிரமாயிரம் தமிழ்க் கவிஞர்கள் உணர்ச்சிததும்பும் பாடல்களைப்பாடுகிறார்கள்; எழுதுகிறார்கள். தன்மான உணர்வையும், இனமான உயர்வையும் உரக்கப்பாடும் இந்த  விந்தைக் கவிஞர்கள் உருவானதே பாரதிதாசனின் பாடல் வரிகளைக் கேட்டும், படித்தும்தான். உண் மைக்கவி, உயிர்க்கவி, புதுமைக் கவி என்றெல்லாம் இன்றும் போற்றப்படும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுக் கவிஞராகத் தமிழுலகுக்கு அறிவூட்டி யவர்.
துணிவை மட்டுமே தனக்குத் துணை யாகக் கொண்டிருந்தவர். சுயமரியாதைக் காரர்களும், பொதுவுடைமைத் தோழர்களும், தமிழியக்க அறிஞர்களும் மேடை தோறும் புகழ்ந்து பேசிய, நூல்கள் தோறும் பாதுகாத்து எழுதிய கவிதை வரிகள் பாரதிதாசனுடையவை.
எந்தப்பொருளில் பாடினாலும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் இன உணர்வு எண்ணங்களையும்  தோய்த்தே பாடுவது என்பதை தனது தனித்தன்மை யாகக் கொண்டிருந்தவர் பாரதிதாசன். ஆணானாலும், பெண்ணானாலும் குழந்தைக்குத் தாலாட்டு என்று பொதுவாகப் பாடாமல் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என்று தனித்தனியாகப் பாடியவர் அவர்
ஆண்குழந்தை தாலாட்டில் வரும் சில வரிகளைப் பாருங்கள்.
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீதென்றால் முட்ட வரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்ட வந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு.!
பெண்குழந்தை தாலாட்டுப் பாடலில் என்ன சொல் கிறார் தெரியுமா?
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே
நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
அழகும், ஆவேசமும் கலந்திருக்கும் கவிதைகள் பாரதிதாசனுடையவை. பழகு தமிழில் பாமரனுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதினார் அவர். 
பிறர் சூழ்ச்சி செந்தமிழை மாய்ப்பதுண்டோ என்பார், ஆவேசமாக. தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பார், ஆனந்தம் பொங்க. தமிழுக்காக, தமிழினத்தின் உயர்வுக்காகப் பாடிய முதல் கவிஞன், மூத்த கவிஞன் பாரதிதாசன். எனினும், பள்ளி, கல்லூரிகளிலும் பல்வேறு தமிழ் அமைப்புகளிலும் பாரதிதாசனைக் கொண்டாடு வதில்லை. பாரதிதாசனுக்கும், தமிழ் மண்ணில் பரவலாக  விழா எடுக்கும் நிலையைத் தமிழ் உணர்வாளர்கள் உருவாக்க வேண்டும். தமிழ் உணர்வையும் இன உணர்வையும் இளைஞர்களிடம் வளர்க்க அவ் விழாக்கள் நிச்சயம் உதவும். 
அழகு தமிழில் அடுக்கு மொழியில் பலர் இன்று எழுதி வருவது தமிழுக்கே உரிய சொல் விளை யாட்டின் தனி விளைச்சல்.  இந்தச் சொல் விளை யாட்டைக் கடந்த நூற்றாண்டில் தங்களின் பரப்புரை களில் மிகச்சிறப்பாகக் கையாண்டவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோர்.
ஏ தமிழ்நாடே!
.....................................
.....................................
ஏ சோர்வுற்ற தமிழ்நாடே
வீறுகொண்டு எழு!
உண்மைக் கவிகளைப் போற்று!
உயிர்க் கவிகளைப் போற்று!
புரட்சிக் கவிகளைப் போற்று!
புத்துலகச் சிறப்புகளைப் போற்று!
பேரறிஞர் அண்ணாவின் இந்தச் சொற்கோவை இன்றும் பலருக்கு மனப்பாடம். 
கலைஞர் மு.கருணாநிதியின் திரைப்பட வசனங் களை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.
புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே!
மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே!
குளிர் நிலவை கொள்ளிக் கட்டையெனக் கூறிய குருடரே!
எடுத்துக் கொள்ளும் உமது வாளை
தடுத்துக் கொள்ளும் உமது சாவை
தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றும் உயிர்பெற்று மேடைகளில் உலவி வந்த காலம் அது.!
எழுத்து, பேச்சு, வசனங்களில் அண்ணாவும் கலைஞரும் சொற்சிலம்பம் ஆடியது போல், கவிதைகளில் விளையாடியவர் புரட்சிக் கவிஞர்.
பாவேந்தரின் கவிதைகள், சொல்லச் சொல்ல இனிமைச் சுவை தரும் சொல்வரிகளைக் கொண் டவை. பாரதியாரைப் பற்றி அவர் எழுதிய வரிகளைப் படித்தால் தமிழின் இனிமையும் பாவேந்தரின் புலமையும் பாரதியாரின் சிறப்பும் நமக்குத் தாமே புலப்படும். பலருடைய எதிர்ப்பையும் மீறி பாரதி யாரிடம் அப்பழுக்கில்லாத அன்பையும், எவராலும் பறிக்க முடியாத பற்றையும் கொண்டிருந்தவர், புரட்சிக் கவிஞர். 
பாரதியாரைப் பற்றி, சிங்காரத் தமிழ் நடையில் பாவேந்தர் பாடிய வரிகளில் சில இங்கே&
‘பைந்தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன், - புதிய
அறம் பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டாநெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!’
பாவேந்தர் விதைத்த, வளர்த்தக் கவிதைப் பயிர் இன்று காணும் இடமெல்லாம் செழித்து வளர்ந்து, தமிழுக்கும், தமிழருக்கும் நலம் பயக்கும் விளைச்சலைத் தந்து கொண்டிருக்கிறது. களை எடுத்தும், நாசக்கார பூச்சிகளைத் தடுத்தும் தமிழ்க் கவிதைகளைக் காப்போம்.
தமிழையும் தமிழினத்தையும் பாதுகாப்போம். வாழ்க பாவேந்தர் புகழ்!
- தமிழ்க் கிறுக்கன் 

நன்றி: தென்னரசு மாத இதழ்

Saturday, November 20, 2010

அறிமுகம்

செம்மொழித் தமிழ் குறித்து  நாம் அறிந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும், தேவையெனில் விவாதம் செய்யவும் இந்தத் தளம் நிச்சயமாக உதவும்;  பயன்படுத்திக் கொள்வோம் . 

செம்மொழியான தமிழ் மொழியை வாழ்த்துவோம், போற்றுவோம். அறிமுகம்